நொறுங்கத் தின்றால் நூறுவயது வாழலாம் என்பது பழமொழி. ஆனால் சத்தான, சரிவிகித உணவே இன்றைய ஆரோக்கியத்தை நிர்ணயிக்கும் காரணிகளாக உள்ளன.
கண்டதையும் தின்று குண்டான உடம்பால் நோய் அச்சுறுத்தல் ஏற்படுவதோடு, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், தேவையற்ற கொழுப்புகளும் அழையா விருந்தாளியாக உடலுக்குள் புகுந்து கொள்கின்றன. உடலை ஆரோக்கியமாகவும், கட்டுக்கோப்பாகவும் வைத்துக்கொள்வதற்காக பொதுவான வழிகாட்டுதல் நெறிமுறைகளையும், உணவுக்கட்டுப்பாடுகளையும் தேசிய சத்துணவு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
தினமும் உடற்பயிற்சி
உடல் தசைகள் வலுவடைய தினமும் 15 நிமிடமாவது உடற்பயிற்சி செய்யவேண்டும். இதனால் தேவையற்ற கலோரிகள் எரிக்கப்படுவதோடு உடலும் உள்ளமும் புத்துணர்ச்சி பெறும்.
உணவுக்கட்டுப்பாடு
காடு, கழனிகளில் வேலை பார்த்த ஆண்களுக்கும் பெண்களுக்கும் நோய் வருவதில்லை. கனிணி முன் அமர்ந்த படியே பைல் பார்ப்பவர்களுக்குத்தான் அனைத்து நோய்களும் அழைக்காமல் வருகின்றன. கட்டுப்பாடான உணவுப் பழக்கத்தை கையாண்டால் நோய் தாக்குதலில் இருந்த தப்பிக்கலாம் என்பது தேசிய சத்துணவு நிறுவனத்தின் அறிவுரை.
காலையில் இட்லி, தோசை
காலை நேரத்தில் எளிதில் செரிமானம் ஆகக்கூடிய ஆகாரங்களாக உட்கொள்ளவேண்டும். அமர்ந்து கொண்டே வேலை பார்க்கும் ஆண்கள் தினமும் 200 மில்லி லிட்டர் பால் அல்லது 2 கப் டீ மற்றும் காபி சாப்பிடலாம். 4 இட்லி அல்லது 3 தோசை சாப்பிடலாம் இவை தவிர 11/2 கப் உப்புமா அல்லது 4 ரொட்டித் துண்டுகள், அல்லது 2 கப் பாலுடன் கூடிய கார்ன் பிளேக்ஸ் எடுத்துக்கொள்ளலாம்.
பெண்களின் உணவு பழக்கத்தை பொறுத்த வரை ஆண்களின் உணவை விட 20 முதல் 30 சதவீதம் குறைவாக எடுத்து கொண்டால் நல்லது.
காலை உணவாக 3 இட்லி அல்லது 2 தோசை அல்லது 1 கப் உப்புமா அல்லது 3 ரொட்டி துண்டுகளே சாப்பிடலாம்.
காய்கறி சாலட்
மதிய சாப்பாட்டை பொறுத்தவரை ஆண்கள் 2 கப் அரிசி சாதம் சாப்பிடலாம். அதனுடன் 1/2 கப் பருப்பு, 3 முதல் 4 கப் காய்கறிகள், 8 துண்டு வெஜிடபுள் சாலட் மற்றும் 1/2 கப் தயிர் எடுத்து கொள்ளலாம்.
அசைவ உணவு வகையில் ஆட்டு இறைச்சி, கோழி இறைச்சி, முட்டை, மீன் போன்றவற்றை ஒரு சில துண்டுகள் மட்டும் சாப்பிடலாம்.
பெண்களை பொறுத்த வரை 1 கப் அரிசி சாதம் சாப்பிட்டால் போதுமானது. மற்ற படி ஆண்கள் சாப்பிடும் அதே அளவு பொருட்களை சாதத்துடன் சேர்த்து கொள்ளலாம்.
இரவில் அரிசி சாதம்
இரவு சாப்பாட்டின்போது ஆண்கள் 2 கப் அரிசி சாதமும், 1/2 கப் பருப்பு, 3 முதல் 4 கப் காய்கறிகள் உண்ணலாம். அத்துடன் 100 கிராம் பழங்களும் சாப்பிடலாம். பெண்களை பொறுத்தவரை 1 கப் அரிசி சாதமும், ஆண்களுக்கான மற்ற உணவு வகைகளையும் சேர்த்து கொள்ளலாம்.
ஆரோக்கியத்திற்கு தாய்பால்
அன்றாட உணவில் புரதச்சத்து நிறைந்த கடல் உணவுகளையும், குறைவான கொழுப்பு கொண்ட பாலையும் உட்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். குழந்தை பெற்ற தாய்மார்கள் , பிறந்த குழந்தைகளுக்கு 6 மாதங்களுக்கு தாய்ப்பால் கொடுப்பது மிகவும் அவசியம் என்றும் கூறப்பட்டுள்ளது. இது குழந்தைகளுக்கு மட்டுமல்லாது தாய்மார்களுக்கும் ஆரோக்கியமானதாகும்.